கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
- பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்து 8 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
- 3-வது முறையாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருந்து வருகிறது.
சென்னை:
நாகை மாவட்டம், ஆயக் காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு வெண்ணிலா என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்காமல், மாவட்ட கல்வி அலுவலர் காலதாமதம் செய்தார்.
இதையடுத்து ஆசிரியை வெண்ணிலா கொடுத்த மனுவை விசாரித்த பள்ளிக் கல்வி இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர், பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விரைவாக பரிசீலிக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டனர். அதன்பின்னரும் அவர் ஒப்புதல் அளிக்காததால், ஆசிரியை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்து 8 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
அதன்பின்னரும் அவர் ஒப்புதல் அளிக்காததால், மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 வாரத்துக்குள் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க பரிசீலிக்கும்படி கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதன்பின்னர் 2-வது முறை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி எந்த பயனும் இல்லை. 3-வது முறையாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், 2016-ம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கல்வித்துறை செயலாளர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியை தரப்பில் ஆஜரான வக்கீல் வி.காசிநாதபாரதி, 3 முறை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும், 2016-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள், இப்போது மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்'' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியை பணி நியமனம் தொடர்பான ஒப்புதல் வழங்குவது குறித்து 2016-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று 2,148 நாட்கள் காலதாமதத்துடன் கல்வித்துறை செயலாளர் மனு தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது.
எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ஐகோர்ட்டு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு கல்வித் துறை செயலாளர் ரூ.500 ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும். அந்த பணத்தை செலுத்தியதற்கான ரசீதை காட்டிய பின்னரே, இந்த உத்தரவு நகலை கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு பதிவுத் துறை வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.