தமிழ்நாடு

திருச்சி அல்லது கடலூரில் நடிகர் விஜய் நடத்தும் பிரமாண்ட மாநாடு

Published On 2024-02-03 12:03 IST   |   Update On 2024-02-03 12:03:00 IST
  • கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார்.
  • 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

சென்னை:

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய் மக்கள் நலப்பணிகளில் தனது ரசிகர்களை ஈடுபடுத்தி வந்தார். இதற்காக அவர் "விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் ஏற்கனவே அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார்.

தமிழ்நாடு விஜய் ரசிகர்கள் இந்த அமைப்பு மூலம் மக்கள் நலப்பணிகளை செய்து வந்தனர். இந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற அவர் முடிவு செய்தார்.

கடந்த சில மாதங்களாக இதற்காக அவர் பல்வேறு பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் கள நிலவரம் பற்றிய ஆய்வு ஒன்றையும் அவர் மேற்கொண்டார். பிறகு தனது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தினார்.

அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நேற்று அவர் புதிய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அவர் தொடங்கிய கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என்று பெயரிட்டுள்ளார். நேற்று மதியம் தேர்தல் ஆணையத்திலும் இந்த புதிய கட்சியை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று நடிகர் விஜய் தனது திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலே தனது இலக்கு என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய கட்சியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விஜய் சுட்டிக்காட்டி உள்ளார்.

கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன் வைத்து அரசியல் பயணம் தொடங்கும் என்றும் நேற்று நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தார்.


அரசியலில் ஈடுபட போவதாகவும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் கூறியிருக்கிறார். தற்போது அவர் கைவசம் உள்ள படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளன. அதன் பிறகு நடிகர் விஜய் தீவிரமாக தேர்தல் களத்துக்கு வருவார் என்று தெரியவந்துள்ளது.

கட்சி பெயர் முடிவாகி விட்ட நிலையில் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் தெளிவுப்படுத்த விஜய் விரும்புகிறார். மேலும் கட்சிக்காக வலுவான சட்ட விதிகளை உருவாக்கும் முயற்சிகளிலும் மேற்கொண்டு உள்ளார். திராவிட கழகங்கள், இஸ்லாமிய கட்சிகள், தலித் கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் விஜய் கட்சியின் கொள்கைகள் அமையும் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே கட்சி கொடியை வடிவமைத்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். கட்சி கொடியை வடிவமைக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துகளை கேட்டாலும் விஜய்யின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்று அவரது கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கட்சி கொள்கை, கட்சி கொடி போன்றவற்றை வெளியிட்ட பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தையும் நடிகர் விஜய் வைத்துள்ளார். வருகிற ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் தொடங்குவார் என்று தெரிகிறது. நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை வரையறுத்து வருகிறார்கள். 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் விஜய்யின் சுற்றுப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் விஜய் தனது ரசிகர்கள் கூட்டத்தை திரட்டினார். மீனவர்களுக்கு ஆதரவாக நடந்த அந்த கூட்டம் திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் இருந்தது. அதன் பிறகு விஜய் அந்த அளவுக்கு தனது ரசிகர்களை எந்த இடத்திலும் கூட்டவில்லை.

தற்போது அரசியலுக்கு வந்து இருப்பதால் ரசிகர்கள், பொதுமக்களை ஒரே இடத்தில் திரட்டி மிக பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அந்த முதல் பொதுக்கூட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் விஜய் கருதுகிறார். இதற்காக தனி குழு ஒன்று திட்டமிட்டு வருகிறது.

ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டும் அந்த மாநாடு வழக்கமாக திராவிட கட்சிகள் நடத்தும் மாநாடு போல அமையாமல் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விஜய் கருதுகிறார். குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

அந்த வகையில் திருச்சி அல்லது கடலூரில் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் விரும்புகிறார். இந்த 2 நகரங்கள் தவிர வேறு ஏதாவது இடத்தில் முதல் மாநாட்டை நடத்தலாமா? என்றும் ஆலோசனை நடந்து வருகிறது.

முதல் மாநாட்டுக்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 2026-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொறுமையாக செய்வதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

அரசியலில் அவரது ஒவ்வொரு நகர்வும் "கப்பு முக்கியம் பிகிலு" என்று அவர் ஒரு படத்தில் உச்சரிக்கும் வசனத்தை பிரதிபலிப்பது போல அமைந்துள்ளது.

Tags:    

Similar News