திரும்பிய திசை எல்லாம் காட்சியளிக்கும் 'செஸ் தம்பி'
- சென்னை நேப்பியர் பாலத்தில் கருப்பு-வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள செஸ் கட்டங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
- நாள்தோறும் ஏராளமானவர்கள் அங்கு சென்று செல்பி, வீடியோ எடுத்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டி நடைபெற இன்னும் சில தினங்களே இருப்பதால் மாநிலம் முழுவதும் செஸ் ஜூரம் தொற்றிக் கொண்டு உள்ளது. மக்களின் பார்வை இந்தப் போட்டியின் மீதே அதிகமாக இருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக அனைத்து வகையிலான விழிப்புணர்வு ஏற்பாடுகளையும் தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இந்தப் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் (மஸ்கட்) 'தம்பி' ஆகும். தம்பி என்ற பெயரில் வேட்டி, சட்டை அணிந்த செங்குதிரை உருவாக்கப்பட்டு உள்ளது.
அனைவரையும் செல்பி எடுத்துக் கொள்ள தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தம்பி என்கிற குதிரை சிலை சென்னையின் முக்கிய இடங்களில் காட்சி அளிக்கிறது. தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம், நேரு ஸ்டேடியம், நேரு பார்க், சென்ட்ரல், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையம், மெரினா கடற்கரை, தலைமை செயலகம், உத்தண்டி, கிழக்கு கடற்கரை சாலை (2), ஒ.எம்.ஆர். சாலை (3), போட்டி நடைபெறும் மாமல்லபுரம் பகுதி (4) உள்பட 21 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்ட்ரல்- விமான நிலையம் இடையே இயக்கப்படும் ஒரு மெட்ரோ ரெயிலிலும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
"நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற வாசகத்துடன் தம்பி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
இது தவிர எழிலகம், ஒமந்தூர் அரசினர் தோட்டம், எழும்பூர் அருங்காட்சியகம், நேரு ஸ்டேடியம் உள்பட 15 இடங்களில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறித்த ராட்சத பலூன் தொங்க விடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
சென்னை நேப்பியர் பாலத்தில் கருப்பு-வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள செஸ் கட்டங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. நாள்தோறும் ஏராளமானவர்கள் அங்கு சென்று செல்பி, வீடியோ எடுத்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.