திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு புரளி- மர்மபொருளை எடுத்து போலீசார் விசாரணை
- ரெயில்நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் சுற்றி வருகிறார்களா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- ரெயில்நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே குட்செட் பகுதி உள்ளது. இங்கு இன்று மிகப்பெரிய பந்து வடிவிலான ஒரு பொருள் நீண்டநேரம் கேட்பாரற்று கிடந்தது. இதனையடுத்து அங்கிருந்த வியாபாரிகள் அந்த பொருைள எடுக்க முயன்றபோது மிகவும் கனமாக இருந்தது.
மேலும் அந்த பந்தை சுற்றி கயிறு கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. இதனால் வெடிபொருளாக இருக்கும் என சந்தேகமடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே இன்ஸ்பெக்டர் சுனில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் டவுன் டி.எஸ்.பி தலைமையில் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்களும், மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
ரெயில்நிலையம், குட்செட், தண்டவாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தினர். மேலும் மர்மமான பந்துபோன்ற பொருளையும் போலீசார் கைப்பற்றி திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச்சென்றனர். உண்மையிலேயே இதுவெடிபொருளா என கண்டறியும், இல்லையெனில் அதனை அழிக்கும் பணியிலும் ஈடுபட திட்டமிட்டனர்.
இதுமட்டுமின்றி ரெயில்நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் சுற்றி வருகிறார்களா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரெயில்நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி பரவவே பயணிகளும் அங்கிருந்த வியாபாரிகளும் அச்சமடைந்தனர். மேலும் ரெயில்நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமிராவில் யாரேனும் சந்தேகப்படும்படியாக நபர்கள் வந்து சென்றார்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் ரெயில்நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.