தமிழ்நாடு

பா.ஜ.க. தலைவராக கவர்னர் செயல்படுகிறார்- துரை வைகோ பேட்டி

Published On 2023-01-14 14:48 IST   |   Update On 2023-01-14 14:48:00 IST
  • இன்றைய தலைமுறை இளைஞர்கள் கல்வி, எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
  • ராமேசுவரத்தில் சேது சமுத்திர திட்டம் நடைமுறைக்கு வந்தால் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அடையும்.

மதுரை:

மதுரையில் இன்று ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களுக்கு சினிமா ஆர்வம் இருப்பது தவறு அல்ல. இதற்காக அவர்கள் மோதல் போக்கை கையாளக்கூடாது. நடிப்பு என்பது ஒரு கலை. நானும் ஒரு காலத்தில் ரசிகனாக இருந்தவன் தான். அதற்காக மோதல் போக்கை கையாளுவது சரியல்ல.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் கல்வி, எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் சேது சமுத்திர திட்டம் குறிப்பிடத்தக்கது.

இது நேரு காலத்தில் இருந்தே தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் நடந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பேசி உள்ளார்.

ராமேசுவரத்தில் சேது சமுத்திர திட்டம் நடைமுறைக்கு வந்தால் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அடையும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, சனாதான மதவாதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். தமிழகத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்காக கலைஞர் வழியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக கவர்னர் ரவி பாரதிய ஜனதா தலைவராக செயல்பட்டு வருகிறார். இங்கு பா.ஜனதாவுக்கு இரட்டை தலைவர்கள் உண்டு. ஒருவர் அண்ணாமலை, இன்னொருவர் கவர்னர் ரவி. தமிழகத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ உள்ளன. ஆனால் கவர்னர் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News