தமிழ்நாடு

தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் கடத்தும் இடமாக சிறைச்சாலையை பயன்படுத்துவதா? எடப்பாடி கண்டனம்

Published On 2024-07-03 07:27 GMT   |   Update On 2024-07-03 07:27 GMT
  • சென்னையில் உள்ள மிக முக்கியமான புழல் சிறையில் உயர் அந்தஸ்தில் பல அதிகாரி இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
  • உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு வடிவங்களில் போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில் அவர்களை திருத்தும் இடமாகத் திகழ்ந்த தமிழக சிறைச்சாலைகள், தற்போது பாதுகாப்பாக போதைப் பொருட்கள் விற்பனை மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போதைப்பொருள் விற்பனையை பல்வேறு பாணிகளில் விற்று வந்த நிலையில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவிக்கும் சிறைவாசிகள், சிறையில் இருந்தபடியே தன் குடும்பத்தினருடன் கைப்பேசியிலும், வீடியோ காலிலும் பேசி, மெத்தபட்டமைன் கடத்தலிலும், விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக வந்த செய்தி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் காவல்துறை தி.மு.க.-வின் ஏவல்துறையாக மாறி, தவறிழைக்கும் ஆளும் கட்சியின் நிர்வாகிகள் மீதும், அவர்களது ஆதரவு பெற்ற குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் உளவுத்துறை, சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவுகளுடன் தற்போது சிறைத்துறையும் இணைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் மெத்தபட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம் தனது மனைவியுடன் ஒருங்கிணைந்து, செங்குன்றத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே மெத் சரக்குக்கான பிக்கப் பாயிண்டை அமைத்துள்ளார் என்றும், போதைப்பொருள் விற்பனை குறித்து சிறையில் இருந்தவாறே தனது மனைவியிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது சிறைத்துறை அதிகாரிகள் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தார்களா? இல்லை போதைப்பொருள் விற்பனைக்கு துணை போனார்களா என தெரியவில்லை.

சென்னையில் உள்ள மிக முக்கியமான புழல் சிறையில் உயர் அந்தஸ்தில் பல அதிகாரி இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

சிறைத்துறையும், காவல்துறையும் இனியாவது விழித்துக்கொண்டு சிறைவாசி யார், யாருக்கு பேசினார், யார் அவருக்கு மெத்தபட்டமைன் விநியோகித்தது, அதற்குப் பணப்பரிமாற்றம் எப்படி நடந்தது என்பதைக் கண்டறிந்து, இந்த குற்றச் சம்பவத்திலாவது மூலக் குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்தின் பிடியில் ஒப்படைத்து, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று அடிக்கடி சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க. திராவிட மாடல் முதலமைச்சர் தற்போது இதுகுறித்து என்ன பதில் அளிப்பார்?

இந்தப் பிரச்சனையில் உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News