தமிழ்நாடு

மலை உச்சியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதை படத்தில் காணலாம்




ஆய்க்குடி அருகே மலையில் பற்றி எரியும் 'காட்டுத்தீ'

Published On 2023-05-29 05:39 GMT   |   Update On 2023-05-29 05:39 GMT
  • மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது.
  • மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி செல்லும் சாலையில் மைனாபேரி மலைப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல், பறவைகள், பாம்புகள் என பல்வேறு இயற்கை உயிரினங்கள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் என அதிக அளவில் இம்மலைப்பகுதி முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.

இந்த மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் புகை மூட்டத்துடன் லேசாக தீப்பிடித்த நிலையில் தற்போது வீசி வரும் காற்றால் மலை பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வருகிறது.

இது குறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறைக்கும் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மலை அடிவாரத்தில் வாழும் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது. மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த பகுதி மக்கள் வனத்துறையினர் வராத நிலையில் தென்காசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பகுதியில் பச்சை மரக்கிளைகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மலை அடிவாரத்தில் அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீடுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் மான்கள், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

எனவே இந்த மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதியாக அறிவித்து மலையை சுற்றி வேலிகள் அமைக்க வேண்டும். உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றனர். மேலும் இன்று காலையிலும் தொடர்ந்து மலைப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News