போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் மறியல்- மதுபாட்டில் பதுக்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- மது பாட்டில்களுடன் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசாரும் இதனை கண்டு கொள்ளாமல் புகார் தெரிவித்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த ஏ. ரெட்டிப்பாளையம் கிராமத்தில் சிலர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
மேலும் புகார் தெரிவித்தவர்களுக்கு மது பாட்டில் பதுக்கி விற்பவர்கள் மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் போலீசாரும் இதனை கண்டு கொள்ளாமல் புகார் தெரிவித்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காட்டூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.
இதற்கிடையே இன்று காலை மது பாட்டில்களுடன் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.