தமிழ்நாடு

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்: திண்ணைப் பிரசாரத்தை தொடங்கியது தி.மு.க.

Published On 2024-02-26 05:29 GMT   |   Update On 2024-02-26 05:29 GMT
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.வின் திண்ணைப் பிரசாரங்கள் தொடங்கியது.
  • அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக பணியை தி.மு.க. தொடங்கி விட்டது.

முகவர்கள் கூட்டம், பி.எல்.ஏ. 2 நிர்வாகிகளுடன் ஆலோசனை என அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு ஒவ்வொரு அணிகளின் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.

தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என அடுத்தடுத்து பிரசார கூட்டங்கள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக அனைத்து ஊர்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அனைத்து தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு எல்.ஈ.டி. திரைகளுடன் பிரமாண்ட கூட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கூட்டம் மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தியது.

இதை தொடர்ந்து கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை காணொலியில் நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் நடத்த வேண்டும் என்று கட்டளையிட்டார்.

திராவிட மாடல் ஆட்சியின் 3-ம் ஆண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடு தோறும் கொண்டு சேர்க்கவும், தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பாரதிய ஜனதா அரசு செய்து வரும் அநீதிகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இன்று (26-ந்தேதி) இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணைப் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. வின் திண்ணைப் பிரசாரம் தொடங்கப்பட்டது.

சென்னையை அடுத்த கோவூரில் நடைபெற்ற திண்ணைப் பிரசாரத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு உரிய நிதி தராமல் வஞ்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு பாடம் புகட்டுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அவருடன் ஒன்றிய செயலாளர்கள் படப்பை மனோகரன், வந்தே மாதரம் உள்பட கழக நிர்வாகிகள் உடன் சென்று பிரசாரத்தில் பங்கேற்றனர்.

இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.வின் திண்ணைப் பிரசாரங்கள் தொடங்கியது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் ஒலிக்க 6 சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 2,378 வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்குச் சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து நாளை மறுநாள் (28-ந்தேதி) ஒருநாள் முழுவதும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணைப் பிரசாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

Tags:    

Similar News