தமிழ்நாடு

கோவில்கள் தொடர்பான குறைகளை தெரிவிக்க உதவி மையம்- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

Published On 2023-01-04 09:35 GMT   |   Update On 2023-01-04 12:19 GMT
  • கோவில்களில் வழங்கப்படும் அர்ச்சனை, அபிஷேகம், சிறப்பு தரிசனம் போன்ற சேவைகளுக்கான கட்டண ரசீதுகளில் கட்டணமில்லா தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கட்டணமில்லா தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு சுமார் 4,700 கோவில்களில் 2 வாரங்களுக்குள் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை:

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவில்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நிறை குறைகளை தெரிவிக்கும் வகையிலும் 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையையும், 24 மணி நேர உதவி மையத்தின் சேவையினையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏற்கனவே குறைகளை தெரிவிக்க அறிவிக்கப்பட்டிருந்த 044 2833 9999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டாலும் குரல் சேவையின் மூலம் 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தெரிவித்து அந்த எண்ணை தொடர்பு கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

கோவில்களில் வழங்கப்படும் அர்ச்சனை, அபிஷேகம், சிறப்பு தரிசனம் போன்ற சேவைகளுக்கான கட்டண ரசீதுகளில் கட்டணமில்லா தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வையில்படும் வகையில் முக்கிய இடத்தில் அறிவிப்பு பலகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு சுமார் 4,700 கோவில்களில் 2 வாரங்களுக்குள் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மையத்தில் பெறப்படும் கோரிக்கை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய தீர்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு, மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகையும் அனுப்பி வைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் சுதர்சன், ஜெயராமன், செந்தில் வேலவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News