தமிழ்நாடு

இம்ரானை கைது செய்து நாடு கடத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2023-01-03 12:11 IST   |   Update On 2023-01-03 12:11:00 IST
  • போதைப் பொருள் கடத்தல்காரர்களின் ஊடுருவல் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலையை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி உள்ளது.
  • தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களாலும், தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளாலும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது.

சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவருடைய கூட்டாளிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் விஸ்வரூபமாக உருவெடுத்துள்ள நிலையில், வெடிகுண்டு கலாச்சாரம் ஆரம்பித்துள்ள நிலையில், கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பது தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து, சட்டவிரோதச் செயல்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடு தான் என்று சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களும், பயங்கரவாதிகளும் முடிவெடுத்து விட்டார்களோ என்ற ஐயம் மக்களிடையே நிலவுகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

போதைப் பொருள் கடத்தல்காரர்களின் ஊடுருவல் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலையை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி உள்ளது. மொத்தத்தில், தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களாலும், தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளாலும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நாடு கடத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News