தமிழ்நாடு

தண்டையார்பேட்டை-வடபழனி பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி

Published On 2022-11-05 14:05 IST   |   Update On 2022-11-05 14:05:00 IST
  • மழைநீர் வடிகால்வாய் பணிகளை சரி செய்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
  • சென்னையில் உள்ள மாநகராட்சி மைதானங்களில் தேங்கிய மழை வெள்ளம் வடியாமல் உள்ளது. அபிராமபுரம்

சென்னை:

சென்னையில் மழை சற்று ஓய்ந்துள்ள நிலையிலும் வடபழனி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளது.

வடபழனி சஞ்சய் காந்தி நகர் பகுதியில் பலத்த மழை பெய்து 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் அங்குள்ள முதல் மற்றும் 2-வது தெருக்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதி சாலைகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் கூடுதல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.

விருகம்பாக்கம் பகுதியிலும் 2 நாட்களாக வெள்ளம் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளது. கடந்த ஆண்டை விட தண்ணீர் குறைவாகவே தேங்கி உள்ளதாகவும், இந்த தண்ணீரும் தேங்காமல் பார்த்துக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் உள்ள மீனவர் காலனியில் வசிக்கும் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயிருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். அங்குள்ள சி. மற்றும் டி. பிளாக் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குடிவந்தோம். ஆனால் அடிப்படை வசதிகள் உள்பட எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது என்று தெரிவித்தனர்.

இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை சரி செய்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள மாநகராட்சி மைதானங்களில் தேங்கிய மழை வெள்ளம் வடியாமல் உள்ளது. அபிராமபுரம், பட்டினப்பாக்கம் பகுதிகளில் உள்ள மைதானங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மெரினாவில் இன்று 2-வது நாளாக சர்வீஸ் சாலையில் உள்ள தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 3 மோட்டார் பம்ப்புகள் வைத்து மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றி வடிகால் அமைத்து கடலுக்குள் விட்டனர்.

Similar News