தமிழ்நாடு

விலை உயர்வு எதிரொலி: தக்காளியை அரசே கொள்முதல் செய்து விற்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2024-10-10 08:14 GMT   |   Update On 2024-10-10 08:14 GMT
  • டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தோல்வி அடைந்துவிட்டது.
  • ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய தமிழக அரசும் இத்தேர்வை திணித்த மத்திய அரசும்தான் இதற்கு காரணம்.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேஷன் கடை பணியாளர்களை போட்டித்தேர்வின் மூலம் நியமிக்கவேண்டும். இதில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். முதல் ஒரு ஆண்டுக்கு தொகுப்பு ஊதியத்திலும் பின் பணி நியமனம் செய்யபட்டு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்த பணி நியமனத்திலும் நேர்காணலில் முறைகேடு நடைபெறுகிறது. போட்டித்தேர்வின் அடிப்படையில் இப்பணி நியமிக்கப்பட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனையாளர் பணி நியமனத்தில் நேர்மையாக இருந்த கூட்டுறவு அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் கதிரேசன் ஓய்வுபெற உள்ளார். ஏற்கனவே சென்னை, காமராசர், பாரதியார், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. சில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பதவி நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் பணி நியமனத்தில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் ஏற்பட்ட மோதலால் துணை வேந்தர் பணி நியமிக்கப்படவில்லை.

தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 120-க்கும், வெங்காயம் ரூ. 80-க்கும் உயர்ந்துள்ளது. தீபாவளியையொட்டி இதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மொத்தமாக கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் விற்க வேண்டும்.

மின்வாரியத்தில் ஆள் குறைப்பு செய்ய உள்ள திட்டத்தை கைவிட வேண்டும். மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 95 விழுக்காடு பயனாளிகள் ஆன்லைனில் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ரூ.5 ஆயிரம் வரை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்ற நிலையை திரும்ப பெற வேண்டும். இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. வரும் 15-ந் தேதி 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்துவது போதுமானதல்ல. 5 ஆயிரம் முகாம்கள் நடத்தவேண்டும். இந்நோய்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கம் அமைக்க அரசும், நிறுவனமும் அங்கீகரிக்க வேண்டும். கட்சிகள் சார்ந்த தொழிற் சங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று துணை முதல்-அமைச்சர் கூறியிருப்பது சரியல்ல. தொழிலாளர்களை விட சாம்சங் நிறுவனத்தின் நலனே பெரிது என அமைச்சர் உதயநிதி கூறியிருப்பது சரியல்ல.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கீழ்முகம் கிராமத்தில் புனிதா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய தமிழக அரசும் இத்தேர்வை திணித்த மத்திய அரசும்தான் இதற்கு காரணம்.

சிதம்பரம் நடராசர் கோவில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகியை தாக்கியது கண்டிக்கதக்கது. கோவில்களில் தீட்ஷிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானத்தை அரசு அமைத்து கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News