மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளை: திருட்டு பெண் படம் அனுப்பி போலீசார் தேடுதல் வேட்டை- கை, கால்களை உடையுங்கள் என ஆடியோ
- சில நேரங்களில் முதியவர்களை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுவார்.
- போலீஸ் மூலமாக தண்டிப்பது வாய்ப்பு குறைவு தான். பெண் என்பதால் அமைதியாக உள்ளோம்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி செங்கம் மேலப்பாளையம் திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து பெண் ஒருவர் காரில் வந்து நகைகளை கொள்ளையடித்து சென்றார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அப்பகுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், கிராம பஞ்சாயத்து பெரியவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு பெண்ணின் படம், ஆடியோ அனுப்பியுள்ளார்.
இந்த படத்தில் இருக்கும் மைதிலி என்ற பெண், சேலம் அருகே உள்ள பெரியகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிராமங்களில் ஒதுக்குப்புறமான வீடுகள், குறிப்பாக வயதான முதியவர்கள் உள்ள வீடுகளை நோட்டமிடுவார்.
அங்கு சென்று உங்கள் மகளைத் தெரியும், உங்கள் உறவினர்களைத் தெரியும் என்று கூறி அவர்கள் அணிந்திருக்கும் நகை மற்றும் பீரோவில் உள்ள நகை ஆகியவைகளை பாலிஷ் போட்டு தருவதாகவும், சில நேரங்களில் முதியவர்களை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுவார்.
மைதிலி மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவருடன் பைக்கில் ஆண் ஒருவரும் வருவார். எனவே, பஞ்சாயத்து தலைவர்களாகிய உங்களுக்கு நான் அனுப்புகிறேன். நீங்கள் அனைவருக்கும் அனுப்புங்கள்.
இந்த பெண் இதே வேலையாக திரிகிறார். இவளைப் பார்த்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள். ஏன், கை, காலை கூட உடையுங்கள்.
போலீஸ் மூலமாக தண்டிப்பது வாய்ப்பு குறைவு தான். பெண் என்பதால் அமைதியாக உள்ளோம். நம்ம ஊர் மக்கள் ஏழ்மையில் உள்ளனர்.
ஒரு பவுன் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை தொட்டுவிட்டது. திருடு போய்விட்டால் வாங்க முடியாது.
இந்த ஆடியோ குறித்து அனைத்து பஞ்சாயத்து, தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.
தயவு செய்து இவள் படத்தை பிரின்ட் எடுத்து, மக்களிடம் கொடுங்கள். கொஞ்சம் எங்களுக்கும் உதவி செய்யுங்கள். இவ்வாறு ஆடியோவில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் திருட்டு பெண்னை தேடி வருகின்றனர்
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.