தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு

Published On 2024-06-17 11:57 IST   |   Update On 2024-06-17 11:57:00 IST
  • மும்முனைப் போட்டி ஏற்பட்டதன் காரணமாக எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
  • ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா 20 ஆயிரம் ஓட்டுகளை பிரித்து கொடுத்து அதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா நிறுத்தப்பட்டுள்ளார். இவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக 9 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து உள்ளார்.

இந்த குழுவில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.பொன்முடி, கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் உள்ளூர் எம்.எல்.ஏ. ஆர்.லட்சுமணனும் இடம் பெற்றுள்ளார். இவர்கள் விக்கிரவாண்டியில் கடந்த 14-ந்தேதி கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் உள்ளூர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

தேர்தலில் யார் யாருக்கு எந்த ஏரியாவை ஒதுக்குவது என்றும் தேர்தலில் வெற்றி பெற என்னென்ன வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அப்பகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் காணை மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்தந்த நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளனர்.

இதே போல் காணை வடக்கு ஒன்றியத்தில் அமைச்சர் சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா 20 ஆயிரம் ஓட்டுகளை பிரித்து கொடுத்து அதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கும் எவ்வளவு ஓட்டுகளை பார்க்க சொல்வது என்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயாவும் நிறுத்தப்பட்டுள்ளதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டதன் காரணமாக எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த மாதம் 20-ந்தேதியில் இருந்து சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதால் அதில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு உதவ கட்சி நிர்வாகிகளையும், பேச்சாளர்களையும் அழைத்துக் கொள்ளலாம் என்று தலைமை கூறி உள்ளதால் இப்போதே கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டி செல்ல தயாராகி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கூட்டணி கட்சி உள்ளூர் பிரமுகர்களும் பிரசாரத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சட்டசபை கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

அதே போல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்தும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்தும் பேச பிரசார சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News