தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட குடிநீர் திட்ட குழாய்கள்
- ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
- உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.
நெல்லை:
நெல்லையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதி பெய்த அதீத கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளம் வடியத் தொடங்கியதும் பேருந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதையடுத்து சேத விவரங்கள் கணக்கீடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் திட்ட குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் செல்கிறது. ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.