தமிழ்நாடு

வியாசர்பாடி வாசிகளுக்கு விடிவு காலம் எப்போது?

Published On 2022-11-02 13:51 IST   |   Update On 2022-11-02 13:51:00 IST
  • சுரங்கப் பாதையில் சிக்கிய அரசு பஸ் தீயணைப்பு துறை மூலம் மீட்கப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் மழை வருகிறது. இந்த பாதையை மூழ்கடிக்கிறது. திட்டம் மட்டும் வந்தபாடில்லை.

சென்னை:

சென்னையில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில் 15 சுரங்கப் பாதைகள் தண்ணீர் தேக்கம் இல்லாமல் வழக்கமான போக்குவரத்து உள்ளது. ஆனால் வியாசர்பாடி ரெயில்வே சுரங்கப்பாதை மட்டும் வழக்கம் போலவே தண்ணீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதையில் சிக்கிய அரசு பஸ் தீயணைப்பு துறை மூலம் மீட்கப்பட்டது.

இந்த காட்சிகள் வியாசர்பாடி வாசிகளுக்கு புதுமையல்ல, மழைக்காலங்களில் போக்கு வரத்து துண்டிப்பது வழக்கமானது தான். இப்படிப்பட்ட நேரங்களில் அந்த பகுதியில் மீன்பாடி ட்ரை சைக்கிள்களில் இளைஞர்கள் அந்த பகுதியில் நிற்பார்கள்.

இரு சக்கர வாகனங்களை அந்த வண்டியில் ஏற்றி மறுகரையில் கொண்டு விடுவார்கள். அதற்கு ரூ.20, ரூ.50 டிப்ஸ் வாங்குவார்கள்.

பெரம்பூர், வியாசர்பாடி, கண்ணதாசன் நகர், கொடுங்கையூருக்கு செல்லும் முக்கியமான சாலை இது. இந்த பாதையில் போக்குவரத்து துண்டித்தால் மாற்றுப் பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றித்தான் செல்ல வேண்டும்.

அதிலும் முக்கியமாக தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நடந்து செல்பவர்கள் இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்து தான் செல்ல வேண்டும்.

ஆண்டு தோறும் சந்திக்கும் இந்த அவதிக்கு விடிவுகாலம் எப்போது ? என்று அந்த பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

ஒவ்வொரு மழையின் போதும் அடுத்த ஆண்டுக்குள் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பு மட்டும் வரும். அதுவும் மழை நீரோடு கரைந்து விடும்.

ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியில் மேம்பாலம் கட்டப்படும். அருகில் ராட்சத கிணறு அமைத்து தண்ணீர் வடிந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று மாநகராட்சியும் அறிவித்தது.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மழை வருகிறது. இந்த பாதையை மூழ்கடிக்கிறது. திட்டம் மட்டும் வந்தபாடில்லை.

Similar News