தமிழ்நாடு

 தேரின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவில் தேர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-10-13 09:33 IST   |   Update On 2023-10-13 09:33:00 IST
  • மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.
  • அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது.

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் நிறைவாக 26-ந் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அதையொட்டி, தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தீபத்திருவிழா உற்சவத்தின் 7-ம் நாளன்று மாடவீதியில் பவனி வரும் பஞ்சரதங்களை சீரமைத்து, அதன் உறுதித்தன்மையை சரிபார்க்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.

அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது. மகாரதத்தின் அச்சு, பீடம், விதானம், ஹைடாலிக் பிரேக் போன்றவற்றில் உள்ள பழுதுகளை முழுமையாக ஆய்வு செய்து சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த பணிகளை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடித்து, பொதுப்பணித்து றையின் (கட்டுமானம்) உறுதிச்சான்று பெறப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.

சீரமைப்பு பணிக்காக மகாரதத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு பணிகள் நடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீபத் திருவிழா முடியும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News