தமிழ்நாடு

தக்காளி விலை குறைந்தது

Published On 2022-11-09 06:16 GMT   |   Update On 2022-11-10 03:13 GMT
  • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 58 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
  • இனி வரும் நாட்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மீண்டும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பரவலாக பெய்த கனமழையால் தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் பெருமளவில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குவிந்து தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வந்தனர். இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை திடீரென அதிகரித்தது.

கடந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மழை பாதிப்பு குறைந்து தமிழகத்தில் தக்காளி உற்பத்தி மீண்டும் தொடங்கியதால் படிப்படியாக குறைந்து வந்த தக்காளியின் விலை கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.19-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை மேலும் குறைந்து ஒரு கிலோ ரூ.17-க்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது :-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 58 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு இல்லை. ஆனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக இனி வரும் நாட்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மீண்டும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இன்று ரகத்தை பொறுத்து ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.100 முதல் ரூ.220 வரை விற்கப்படுகிறது. தக்காளியின் விலை குறைந்து உள்ள போதிலும் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News