கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் பரிசாக மகத்தான வெற்றி பெற உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின்
- திருவண்ணாமலையில் ரூ. 38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
- இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் தினமும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
திருவண்ணாமலையில் ரூ. 38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 56 கோடி ரூபாய் செலவில் சாத்தனூர் அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் தினமும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படும். திருவண்ணாமலை-திருப்பத்தூருக்கு ரெயில் சேவை வழங்கப்படும்.
புதியதாக அமைய உள்ள சுங்கச்சாவடி ரத்து செய்யப்படும். கடந்த 2014-ம் ஆண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயாக இருந்தது. இன்று சிலிண்டர் விலை 1,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தற்போது 100 ரூபாய் குறைப்பு என்ற நாடகத்தை மோடி அரசு நடத்தி உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் மீது 500 ரூபாய் விலையை ஏற்றி விடுவார்.
அவர்களின் நாடகத்தை மக்கள் நம்பாதீர்கள், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். 75 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசலும் வழங்கப்படும்.
ஜூன் 3-ந் தேதி முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள், ஜூன் 4-ந் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்.
கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக 40-க்கு 40 என்ற மகத்தான வெற்றி இலக்கை அடைய அனைவரும் அயராது உழைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.