தமிழ்நாடு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் 3 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

Published On 2024-02-12 11:18 IST   |   Update On 2024-02-12 11:18:00 IST
  • பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது.
  • மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம். 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக,

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு அளித்தார்.

இதையடுத்து 3 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து ராஜேஸ்தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீடு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேல் முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை மாற்றக்கோரிய ராஜேஸ் தாசின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்காக ஜன.12-ந்தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-க்கு உத்தரவிட்டார். மேலும் ஜன.18-ந்தேதி இறுதி விசாரணையை துவங்கி 24-ந்தேதிக்குள் முடிக்க விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Similar News