புதுமணப் பெண்ணிடம் தாலி பறிமுதல் - சுங்க அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ஆணை
- நகைகளை திரும்ப வழங்கக்கோரி கணவர் ஜெயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
- சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனுஷிகா இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளார். பிரான்ஸில் இருந்து வந்த ஜெயகாந்த் என்பவருடன் தனுஷிகாவுக்கு 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்துகொண்ட ஜெயகாந்த் பிரான்ஸுக்கு திரும்பிச் சென்று அவருடைய மனைவிக்கான விசா ஏற்பாடுகளை செய்தார்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு விசா கிடைத்தது. தமிழ்நாட்டில் உள்ள சில கோவில்களுக்கு சென்றுவிட்டு பிரான்ஸ் செல்ல முடிவு தனுஷிகா செய்து இருந்தார். அப்போது சென்னை விமான நிலையம் வந்தபோது அவரது நகை அதிக எடையில் இருப்பதாக அவரின் தாலி உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த நகைகளை திரும்ப வழங்கக்கோரி கணவர் ஜெயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இலங்கையைச் சேர்ந்த பெண்ணிடம் கைப்பற்றிய 216 கிராம் எடை கொண்ட தாலியை உடனடியாக திருப்பி அளிக்கும்படி சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நம்முடைய பழக்கவழக்கங்களின்படி, திருமணமான பெண்கள் அந்த எடையில் தங்கத்தில் தாலி போட்டுக்கொள்வது நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதிகாரிகள் சோதனை செய்யும்போது அவர்கள் அனைத்து மதத்தின் பழக்கவழக்கங்களையும் மதிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி மீது தகுந்த துறைசார் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.