கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளது- மகளிர் ஆணைய தலைவி
- பெண்கள் அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.
- வரதட்சணை கொடுமை குற்றங்கள் தற்போது குறைய தொடங்கி உள்ளது.
கோவை:
தமிழகத்தில் உள்ள பெண் மேயர்கள், துணை மேயர்கள், உள்ளாட்சி பெண் பிரதிநிதிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கோவையில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியில் கோவை, திண்டுக்கல், வேலூர், மதுரை, ஈரோடு, தாம்பரம் காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய மாநகராட்சிகளை சேர்ந்த பெண் மேயர்கள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ் குமாரி தலைமை வகித்தார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்துகொண்டார்.
பயிற்சி வகுப்பில் மகளிர் ஆணையத் தலைவி குமாரி பேசும்போது கூறியதாவது:-
மகளிர் ஆணையம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை பெண்களுக்கான சட்டங்கள், உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பது தான் முதன்மையான பணி. சிலவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். பெண்கள் பிரச்சினைகள் குறித்து கிராமப்புறங்களில் இருந்து தான் அதிக அளவில் மகளிர் ஆணையத்திற்கு மனுக்கள் வருகின்றன. தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் விருப்பமாக உள்ளது. பெண்கள் அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மகளிர் ஆணையத்துக்கு பல்வேறு மனுக்கள் வருகின்றன. குடும்ப வன்கொடுமை குற்றங்களில் சிக்கி பல பெண்கள் தவிக்கிறார்கள். குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் குடும்ப வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
வரதட்சணை கொடுமை குற்றங்கள் தற்போது குறைய தொடங்கி உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.