தமிழ்நாடு

2025 ஆங்கில புத்தாண்டு- அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Published On 2025-01-01 02:54 GMT   |   Update On 2025-01-01 02:54 GMT
  • நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம்.
  • கஞ்சா மற்றும் போதை இல்லாத தமிழகமாக 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டும்.

2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பிறக்கின்ற 2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும்!

கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும்.

2026-இல், 7-ஆவது முறையாக கழக ஆட்சி அமைந்திட 2025-இன் ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம்.

தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் - சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்கிற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம்.

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு, மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

2025ல் நாம் அடியெடுத்து வைக்கும் இத்தருணம், இப்பாதையை நமதாக்கிக்கொண்டு ஒரு சிறந்த அத்தியாயத்தை எழுதுவதற்கான நேரம்.

புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது என்பது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வது.

நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இன்பம் பெருரும், துன்பம் ஒழியும், என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நன்நாளிலிருத்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் இந்திய நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திடவும் வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் உறுதியாக கிடைத்திட வேண்டும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு, கஞ்சா மற்றும் போதை இல்லாத தமிழகமாக 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டுயென தேமுதிக சார்பில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News