பிப்., 24-ல் பொதுக்கூட்டம் : பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்களை திருப்புவாரா சசிகலா?
- ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்-முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க ஏற்பாடு.
- நல உதவிகளையும் நலிந்த தொண்டர்களுக்கு சசிகலா வழங்குகிறார்.
மதுரை:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில் அவரது தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.
2016-21 வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினரின் ஏகோபித்த ஆதரவை பெற்றார். இதையடுத்து சசிகலா மற்றும் தினகரனின் ஆதிக்கத்தையும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்த ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தார். அ.தி.மு.க.வில் இணைந்ததும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் பொறுப்பையும் பெற்றார்.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இரட்டை தலைமையில் 2021 சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க. சந்தித்தது.
ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் வலுப்பெற்றது. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நீக்கம் செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தற்போது அ.தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. இதனை சுட்டிக்காட்டும் முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் அவ்வப்போது சில விமர்சனங்களை எடப்பாடிக்கு எதிராக முன்னெடுத்து வைக்கிறார்கள்.
அவர்களின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இந்தநிலையில் தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்தும் அ.தி.மு.க. தொண்டர்களின் மத்தியில் சலசலப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது செங்கோட்டையன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ளது.
இந்த நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க.வினர், அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ஜெயலலிதா பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக கொண்டாடி வருகிறார்கள்.
சமீபத்தில் பேசிய சசிகலா, அ.தி.மு.க. என் கைக்கு விரைவில் வரும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என்று கர்ஜனை செய்தார்.
இவரது கருத்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல தரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அ.தி.மு.க.வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஒரு தரப்பு தொண்டர்கள் என்று சசிகலாவின் கருத்தை ஆமோதிக்கும் ஒரு கூட்டமும் அ.தி.மு.க.வில் இருக்கத்தான் செய்கிறது.
அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை காட்டிலும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் இதே கருத்தை மறைமுகமாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி சசிகலா பங்கேற்கும் வகையில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை உசிலம்பட்டியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளை தென் மாவட்டம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திரளாக இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இந்த பொதுக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும் மறைமுகமாக இந்த பொதுக்கூட்டத்தை வெற்றி பெறச் செய்யும் வகையில் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திரை மறைவில் இருந்து செய்ய திட்டமிட்டுள்ளனர்.
எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்களை திசை திருப்பும் வியூகமாக உசி லம்பட்டி பொதுக்கூட் டத்தை சசிகலா பயன்படுத்துவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரி வித்துள்ளனர்.
பல்வேறு நல உதவிகளையும் நலிந்த தொண்டர்களுக்கு கூட்டத்தில் சசிகலா வழங்குகிறார். இந்த பொதுக் கூட்டம் அ.தி.மு.க. ஒற்று மைக்கு இது தொடக்க புள்ளியாக அமையும் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கி றார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறுகையில், சசிகலாவின் நடவடிக்கைகள் அ.தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உறுதியாக இருக்கிறார்கள்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி கூட்டணி அமையும், அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தின் நல்லாட்சி மீண்டும் அமையும்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற சிலர் அவ்வப்போது எழுப்பும் சலசலப்பு மற்றும் பரபரப்பு காரணமாக எடப்பாடியார் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க.விற்கு சிறிதளவு சேதாரமும் ஏற்படாது. எனவே உசிலம்பட்டி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள்.
சசிகலாவின் ஆசைக்கு பெரும் ஏமாற்றமாகவே உசிலம்பட்டி பொதுக்கூட்டம் முடியும் என்று முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
எப்படி இருந்தாலும் சசிகலாவின் உசிலம்பட்டி பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.