சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 29 ஆயிரம் பேர் பதிவு
- கடந்த 2023-ம் ஆண்டு 1,560 பேர் மட்டுமே செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்றனர்.
- வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்தது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கடந்த 2023-ம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு 1,560 பேர் மட்டுமே செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்றனர். அதனை தொடர்ந்து செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்தநிலையில், சென்னையில் வளர்ப்பு மற்றும் தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து அரங்கேறியது. இதனால் சாலையில் செல்வதற்கே பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். இதையடுத்து, வீட்டில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்தது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் உரிமம் பெற கடந்த ஆண்டு மே மாதம் முதல் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு செல்லபிராணிகளுக்கு உரிமம் பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 29 ஆயிரத்து 898 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். இதில், உரிய ஆவணங்களை இணைக்காததால் 15 ஆயிரத்து 523 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. 8 ஆயிரத்து 725 பேருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. மேலும், 5 ஆயிரத்து 650 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. இத்தனை ஆண்டுகளில் செல்லபிராணிகளுக்காக உரிமம் பெற இவ்வளவு பேர் விண்ணப்பம் செய்ததே இல்லை. இதுவே முதல் முறை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.