கத்திமுனையில் மிரட்டி பெண் பாலியல் வன்கொடுமை- 3 வடமாநில வாலிபர்கள் கைது
- பனியன் நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
- கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.
திருப்பூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் தனது கணவன், குழந்தையுடன் திருப்பூர் அடுத்துள்ள தெக்கலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்துள்ளனர்.
பின்னர் அங்கு வேலை பிடிக்கவில்லை என்று அந்த தம்பதி மீண்டும் தங்கள் சொந்த ஊரான ஒடிசா மாநிலம் செல்ல திருப்பூர் ரெயில் நிலையம் வந்துள்ளனர். இந்த நிலையில் ரெயில் நிலையம் அருகில் புஸ்பா பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்து இருந்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் அறிமுகமான பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம்(24), டானிஷ்(25) மற்றும் முர்சித் என்ற மூன்று வட மாநில இளைஞர்கள் நாங்கள் வேலை பார்க்கும் பனியன் நிறுவனம் அருகில் தான் உள்ளது என கூறியுள்ளனர். அந்த நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி மற்றும் குழந்தை தங்க இடம் இல்லாததை அறிந்த இந்த மூன்று பேரும் அந்த தம்பதியை அவர்கள் தங்கும் லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இரவு உணவு தயார் செய்த இவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் இவர்கள் ஆறு பேரும் ஒரே அறையில் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் அக்கம்பக்கதினர் தூங்கிய உடன் நதீம், டானிஷ் மற்றும் முர்சித் என மூன்று வட மாநில இளைஞர்களும் கையில் கத்தியை வைத்து பெண்ணின் கணவனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் அந்தப் பெண்ணை கணவன் மற்றும் குழந்தை கண் முன்பே ஒருவர் மாற்றி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணை மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளனர். வெளியே வந்த அவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் உடனே விரைந்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள நதீம், டானிஷ் மற்றும் முர்சித் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர் பின்னர் அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, உயிர் பயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.