தமிழ்நாட்டில் 53.4 சதவீத பெண்கள் ரத்தசோகையால் பாதிப்பு
- ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் ரத்தசோகை பிரச்சனை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ரத்தசோகை நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக மகப்பேறு காலகட்டத்தில் பெண்களுக்கு ரத்தசோகை குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. பருவம் அடைதல், மாதவிடாய், பிரசவ நேரங்களில் பெண்கள் உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறுகிறது. இதனால் பெண்கள் இயல்பாகவே ரத்தசோகைக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஆனால் ஆண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மட்டுமே ரத்தசோகை நோய் ஏற்படுகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு 15-49 வயது பெண்களிடம் ரத்தசோகை பாதிப்பு தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி, இந்தியாவில் அதிகப்படியாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் 92.8 சதவீதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 71.4 சதவீத பேரும், திரிபுராவில் 67.2 பேரும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சமாக லட்சத்தீவுகளில் 25.8 சதவீத பேரும், நாகாலாந்தில் 28.9 சதவீத பேரும், மணிப்பூரில் 29.4 சதவீத பேரும், மிசோரம் மாநிலத்தில் 34.8 பேருக்கும் ரத்தசோகை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 53.4 சதவீத பேரும், புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பை மத்திய சுகாதாரத்துறை 2019-2021 காலகட்டத்தில் எடுத்துள்ளது. இதன்படி, இந்தியாவில் அதிக ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 22-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, "ஏறத்தாழ 50 சதவீத ரத்தசோகை நோய் பாதிப்பு இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. மற்றவை வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் வருகிறது" என்றார்.