கோவையில் 17 வயது சிறுமியை சிறைவைத்து பாலியல் வன்கொடுமை- 7 கல்லூரி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது
- குனியமுத்தூர் பகுதியில் தான் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறும், அங்கு தனியாக பேசலாம் என கூறி அழைத்துள்ளார்.
- அவரிடம் பாட்டியும், போலீசாரும் துருவி, துருவி விசாரித்தனர்.
கோவை:
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் தேர்ச்சி பெறாததால் அடுத்து படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இவரது பெற்றோர் வெளியூரில் உள்ளனர். இங்கு தனது பாட்டி பராமரிப்பில் இருந்து வருகிறார்.
சிறுமி, செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். வலைதளத்தில் மூழ்கி கிடந்த அவருக்கு குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பழக்கம் ஆனார். அந்த மாணவர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர். இங்கு தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார்.
சிறுமியும், அந்த மாணவரும் அடிக்கடி போனில் பேசியும், சமூக வலைதளங்கள் மூலமும் பேசி வந்தனர். அந்த மாணவர், மாணவியை அடைய திட்டமிட்டு நேரம் பார்த்து காத்திருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அந்த மாணவியை அவர் தொடர்பு கொண்டுள்ளார்.
குனியமுத்தூர் பகுதியில் தான் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறும், அங்கு தனியாக பேசலாம் என கூறி அழைத்துள்ளார்.
அந்த பெண்ணும், மாணவரை நம்பி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். தனது பாட்டியிடம் வெளியில் செல்வதாகவும், உடனே திரும்பி விடுவதாகவும் கூறி விட்டு புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இரவை கடந்தும் அந்த பெண் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பாட்டி உக்கடம் போலீஸ்நிலையம் சென்று புகார் செய்தார். போலீசார் அந்த பெண்ணை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண் வீடு திரும்பினார். அவரிடம் பாட்டியும், போலீசாரும் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவலை அந்த பெண் தெரிவித்தார்.
குனியமுத்தூரில் கல்லூரி மாணவர் தங்கியிருந்த அறைக்கு அந்த பெண் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் மாணவர் ஆசைவார்த்தைகள் கூறி இருக்கிறார். பின்னர் பெண்ணை நிர்வாணப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின் மாணவருடன் படித்த மேலும் 6 மாணவர்களும் அங்கு வந்துள்ளனர். அவர்களும் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். அங்குள்ள அறையில் அந்த பெண்ணை சிறைவைத்து இரவு விடிய, விடிய 7 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் காலையில் அந்த பெண்ணை வீட்டருகே கொண்டு வந்து விட்டு விட்டு 7 பேரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.
அந்த பெண் அளித்த தகவலின் பேரில் கல்லூரி மாணவர்கள் 7 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை சிறைவைத்து 7 பேரும் பலாத்காரம் செய்தது உறுதியானது.
இதையடுத்து 7 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர்.