தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் பெற 7,840 பேர் காத்திருப்பு
- இந்தியாவிலேயே உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
- முதலமைச்சர் உடல்நல காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஆஸ்பத்திரிகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
சென்னை:
நெருங்கிய ஒருவரின் மரணம் என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால், அந்தத் தருணத்தில் ஒருவர் உறுப்புகளை தானமாகத் தர முன்வந்து, முகமறியா சிலரைக் காப்பாற்ற முன்வருவதற்கு மிகப்பெரும் கருணையும், மனமும் வேண்டும். இயலாத சிலருக்கு உறுப்புகளை தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம்.
ஒருவர் வாழ்வதற்கு தேவையான முக்கிய உறுப்பு செயலிழந்து அதனால் வாழ முடியாத சூழ்நிலையில், வேறொருவரின் உறுப்பை பொருத்தி ஒரு புதிய வாழ்வை அளிக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் போற்றப்பட வேண்டிய சாதனை.
முந்தைய காலகட்டங்களில் இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இதுகுறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில் அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற அமைப்பை கடந்த 2014-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அதன்மூலம் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நாளடைவில் விழிப்புணர்வு இல்லாமல் மீண்டும் குறைய தொடங்கியது.
இதற்கிடையே உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே உள்ள தவறான புரிதலை போக்கும் வகையிலும், கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 2023-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு ஒன்றை அறிவித்தார். அதில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்திருந்தார். அரசு எடுத்த இந்த புதிய முயற்சி மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் உடல் உறுப்பு தானம் செய்ய தூண்டியது. அந்தவகையில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு (2024) 268 பேர் உறுப்பு தானம் செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1,500 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன. அதில் விபத்தில் மூளைச்சாவு அடைத்த 186 பேரும், விபத்து இல்லாமல் மூளைச்சாவு அடைந்த 82 பேரும் அடங்குவர். அரசு ஆஸ்பத்திரியில் 146 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 122 பேரும் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதன் காரணமாக இந்தியாவிலேயே உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
இதேபோல, முதலமைச்சர் உடல்நல காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஆஸ்பத்திரிகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் தேவைப்படுவோர், அரசிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தானமாக கிடைக்கும் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. தற்போது உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் தற்போதுள்ள முன்பதிவு பட்டியலின்படி உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 7 ஆயிரத்து 840 பேர் காத்திருக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றால், உறுப்பு தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதால், மறுவாழ்வு பெற்றவர்கள் இவ்வுலகில் ஏராளம். எனவே, அச்சமின்றி உடல் உறுப்பு தானம் செய்ய முன்வாருங்கள் என பொதுசுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.