ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
- வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், திருநங்கை வாக்காளர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இடைத்தேர்தலையொட்டி இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வாக்குச்சாவடிகள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 237 வாக்குச்சாவடிகளில், 4 இடங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்காளர்கள் அதிகம் உள்ள பி.பி.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், வளையக்கார வீதி, மகாஜன பள்ளி ஆகிய 4 இடங்களில் உள்ள 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அமைதியாக தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.