அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பிடித்த 29 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
- தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் நடைபெற்றது.
- டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி, தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26,236 அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் மற்றும் 19,097 தனியார் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் என மொத்தம் 45,333 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இத்தேர்வில் 24,853 அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், 16,738 தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், என மொத்தம் 41,591 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், தமிழ்நாட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இண்டஸ்டி ரியல் ரோபாடிக்ஸ் தொழிற் பிரிவில் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர் என்.அந்தோணி சேசுராஜ் மற்றும் திருச்சி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி என்.மோகன பிரியா மற்றும்
மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் அன்ட் ஆட்டோ மேஷன் தொழிற் பிரிவில் சிதம்பரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி யு.பிரசிதா மற்றும் வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர் எஸ்.மணிமுருகன் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
இன்பர்மேஷன் டெக்னாலஜி தொழிற் பிரிவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூரை சார்ந்த கே.இந்துஸ்ரீ அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் நவீன கால தொழிற்பிரிவுகள் உட்பட பல்வேறு தொழிற் பிரிவுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 19 அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும் மற்றும் 5 தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளும் என மொத்தம் தமிழ்நாட்டை சேர்ந்த 29 மாணவ- மாணவிகள் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
பயிற்றுநர்களுக்கான பயிற்சியில் பயிற்சி பெற்ற காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுனர் வி.ஸ்வேதா, வெல்டர் தொழிற்பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவ்வாறு, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 29 மாணவ மாணவிகளும் மற்றும் 1 பயிற்றுநரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பா.விஷ்ணு சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.