தமிழ்நாடு

புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிவிட்டு மாவட்ட நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை

Published On 2025-01-24 15:43 IST   |   Update On 2025-01-24 15:43:00 IST
  • மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் அரசியலில் பெரும்புயலை கிளப்பியது.
  • தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சென்னை:

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

அன்று முதல் அவர் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜயின் முக்கிய இலக்காக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொள்கைகள், திட்டங்களை அறிவிப்பதற்காக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடிகர் விஜய் சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடத்தினார். மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் அரசியலில் பெரும்புயலை கிளப்பியது.

குறிப்பாக தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க தயார் என்று அவர் அறிவித்தது அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தை நகரம் முதல் கிராமம் வரை உள்கட்டமைப்பை வலுப்படுத்த நடிகர் விஜய் அறிவுறுத்தினார். அதன் பேரில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மிக குறுகிய காலத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது.

அடுத்த கட்டமாக கட்சி செயற்குழுவை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடத்தினார். அப்போது புதிய மாவட்ட செயலாளர்கள் உள்பட கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவுகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். அடுத்து திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பொது மக்களை சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார்.

சமீபத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை விஜய் நேரில் சந்தித்து பேசினார். தனது கள அரசியல் பயணம் இங்கிருந்து தொடங்குவதாக விஜய் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து தலைவர் விஜய் சமீபத்தில் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் 234 தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது.

கட்சி பதவிகளில் முறைகேடு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அதிரடி உத்தரவை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வாயிலாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் இன்று (வெள்ளிக் கிழமை) ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி,  தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முதலாம் ஆண்டு விழாவின்போது எத்தனை கொண்டாட்டங்கள் மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிவடைந்ததும் 7 மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார்.

புதிய மாவட்ட செயலாளர்கள் விவரம் வருமாறு:-

அரியலூர்-சிவா

கடலூர்-ராஜ்குமார், சீனு

கள்ளக்குறிச்சி-பரணி பாலாஜி

சேலம்- பார்த்திபன்

கோயம்புத்தூர்-சம்பத், விக்னேஷ்

கரூர்-மதி

ஈரோடு- பாலாஜி, வெங்கடேஷ் என ஒவ்வொரு மாவட்டமும் சட்டமன்ற தொகுதிகளுக் கேற்ப 2, 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு 14 புதிய மாவட்ட செயலாளர் பட்டியலை அதிரடியாக விஜய் இன்று வெளியிட்டார்.

சில தினங்களில் சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் வெளியே அனுப்பி விட்டு, பின்னர் மாவட்ட நிர்வாகிகளிடம் தனித் தனியாக ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News