'ரஷியா- அமெரிக்கா பேச்சுவார்த்தைதானே?.. செய்தியாளர் கேள்விக்கு அன்புமணி கிண்டல் பதில்
- ராமதாஸ், பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.
- இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.
அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே மேடையிலேயே கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் பா.ம.க. உட்கட்சி மோதல் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார். இதற்கிடையே கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது. சமாதான பேச்சுவார்த்தைக்கு அன்புமணி பல நிபந்தனை விதித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் பெரும்பாலும் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துவிட்டு புறப்பட்டார் அன்புமணி. அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பேச்சுவார்த்தை குறித்து கேள்வி எழுப்பியபோது "ரஷ்யா - அமெரிக்கா பேச்சுவார்த்தைதானே?" என்று அவர் கிண்டலாக பதில் அளித்தார்.
முகுந்தன் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட போது அன்புமணி கும்பிட்டு விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் தான் முகுந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.