மேல்மா சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த உழவர்களை தாக்கி, மிரட்டுவதா? ராமதாஸ் கண்டனம்
- மேல்மா நிலங்களுக்காக மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தமிழக அரசு வழி வகுக்கக் கூடாது.
- அதற்கு முன்பாகவே நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் உழவர்களை திமுக நிர்வாகிகளைக் கொண்டு தாக்குவது, மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிராக மதிக்கும் நிலங்களை தர மறுக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்க அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
செய்யாறு சிப்காட் வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம். அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 2700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதைக் கண்டித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 597-ஆம் நாளாக இன்றும் மேல்மா கூட்டுச் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என்று கூறி வரும் தமிழக அரசு அங்கு போராடி வரும் உழவர்கள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியது, பொய்வழக்குகளை பதிவு செய்தது என எண்ணற்ற அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
ஆனால் அதுமட்டுமின்றி, அதற்கு அடுத்த நாள் அண்ணாமலை என்ற விவசாயியை சந்திப்பதற்காக சென்ற ரேணுகோபால் என்ற உழவரை திமுகவைச் சேர்ந்த கருணாநிதியும், அவரது ஆட்களும் கொடூரமாகத் தாக்கியதுடன் அவரது கை விரல்களையும் கடித்து காயப்படுத்தியுள்ளனர்.
அதற்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் ரேணுகோபால், கருணாநிதி மீது அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை. மாறாக, கருணாநிதியிடம் புகார் மனு பெற்று ரேணுகோபால் மீது வழக்குப் பதியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டுமானால். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க அங்குள்ள உழவர்கள் மீது அனைத்து வகையான அடக்குமுறைகளையும் அரசு ஏவி வருகிறது. அடக்குமுறை மூலம் பணிய வைக்க நினைத்தால் அரசுக்கு தோல்வியே கிடைக்கும்.
அதிகாரம் கைகளில் இருக்கிறது என்பதற்காக மக்களைத் தாக்கலாம், அச்சுறுத்தலாம், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நிலங்களை பறிக்கலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது. ஜனநாயகத்தில் அடக்குமுறை ஒரு போதும் வென்றது கிடையாது. ஆட்சியாளர்களிடம் உள்ள அதிகாரத்தை விட கூடுதல் சக்தி கொண்ட வாக்குரிமை என்ற அதிகாரம் மக்களிடம் உள்ளது. அதை அவர்கள் பயன்படுத்தினால் ஆட்சியாளர்கள் அனைவரும் காணாமல் போய்விடுவார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
மேல்மா பகுதியில் உள்ள விளைநிலங்கள் வளம் மிக்கவை அவற்றை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று உழவர்கள் கூறி விட்ட நிலையில் அந்தத் திட்டத்தை கைவிடுவது தான் அரசுக்கு அழகு. அதற்கு மாறாக உழவர்களை கைது செய்வது, தாக்குவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபடக்கூடாது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிக்கல் நீடித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூகத் தீர்வை கண்டிருக்க வேண்டும். ஆனால், அவரை சந்திக்க விரும்பும் உழவர்களைப் பார்ப்பதற்குக் கூட நேரம் தர மறுக்கிறார். இது நியாயமல்ல.
முந்தைய திமுக ஆட்சியின் போது சென்னை துணை நகரம். மின்சாரத் திட்டங்கள் என பல காரணங்களுக்காக பல்லாயிரக்கணக்கான நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. திருப்போரூர், செய்யூர், இராணிப்பேட்டை. பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைத் திரட்டி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்திய நான். அனைத்து நிலங்களையும் மக்களுக்கு மீட்டெடுத்துக் கொடுத்தேன்.
தேவைப்பட்டால் மேல்மா பகுதி உழவர்களின் நிலங்களைக் காப்பதற்காகவும் நான் நேரடியாக களமிறங்கி போராடத் தயங்க மாட்டேன். மேல்மா நிலங்களுக்காக மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தமிழக அரசு வழி வகுக்கக் கூடாது. அதற்கு முன்பாகவே நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
என ராமதாஸ் கூறினார்.