குற்றாலம் அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை
- மெயின் அருவி கரையின் பல பகுதிகள் சேதம் அடைந்தன.
- வெள்ளத்தில் பெரிய அளவிலான கற்களும், மரங்களும் அடித்து வரப்பட்டதால் அருவி கரைகள் பெரும் சேதம் அடைந்து உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று அதிகாலை முதல் மழை முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக குற்றால அருவிகளில் இதுவரை இல்லாத அளவு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மெயின் அருவி கரையின் பல பகுதிகள் சேதம் அடைந்தன. அருவிக்கரை அருகில் போலீசார் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தி வந்த இரும்பு கூண்டு அடியோடு காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் சில பகுதிகளும் சேதம் அடைந்தது.
வெள்ளத்தில் பெரிய அளவிலான கற்களும், மரங்களும் அடித்து வரப்பட்டதால் அருவி கரைகள் பெரும் சேதம் அடைந்து உள்ளது.
இன்று காலை முதல் குற்றாலத்தில் மழை இல்லாத நிலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி , புலி அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. எனினும் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4-வது நாளாக நீடிக்கிறது.
இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் அருவி கரைக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை முதல் வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் மாலையில் வெள்ளப்பெருக்கு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதன் பின்னர் மாலை முதல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.