அடுத்த மாதம் முதல் சென்னை-மைசூர் அதிவிரைவு ரெயில் சாதாரண ரெயிலாக மாற்றம்
- இந்த ரெயில் முதலில், சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டது.
- 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரெயில், மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு பெங்களூருவை அடையும். இரவு 10 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரெயில் 23 நிலையங்களில் நின்று செல்கிறது. 497 கி.மீ. தூரத்தை 9 மணி 15 நிமிடங்களில் கடக்கும் இந்த ரெயில் சராசரியாக மணிக்கு 54 கி.மீ. வேகத்தை கொண்டிருக்கிறது.
இந்த ரெயில் முதலில், சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. இதன்பிறகு, 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த அதிவிரைவு ரெயில் ஜனவரி 3-ந்தேதி முதல் சாதாரண விரைவு ரெயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயிலின் குறைந்தபட்ச சராசரி வேகமான 55 கி.மீ. வேகத்தை பராமரிக்கத் தவறியதால், இந்த ரெயில் சாதாரண ரெயிலாக மாற்றப்பட உள்ளது. ரெயில் கட்டணமும் குறைக்கப்பட உள்ளது.
அதன்படி சென்னை-மைசூரு இன்டர்சிட்டி விரைவு ரெயில் கட்டணம் இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு ரூ.15-ம், சேர்கார் வகுப்புக்கு ரூ.45-ம் குறையும். இதுபோல, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விரைவு ரெயிலில் பயணிப்பவர்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணம் கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.