கடன் பிரச்சனை- பிள்ளைகளை கொன்று மருத்துவர், வழக்கறிஞர் தம்பதி தற்கொலை
- கடன் கொடுத்தவர்கள் கடந்த சில மாதங்களாக டாக்டர் பாலமுருகனிடம் கடனை திருப்பிக் கேட்டு வலியுறுத்தி வந்தனர்.
- நீண்ட நேரமாக காலிங் பெல் அடித்தும், கதவை தட்டியும் யாரும் திறக்காததால் பணிப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சென்னை:
சென்னை அண்ணா நகர் 7-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் பாலமுருகன் (வயது 53) குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி சுமதி (வயது 47) சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஜஸ்வந்த் குமார் (வயது 18), லிங்கேஷ் குமார் (வயது 16) என்ற 2 மகன்கள் இருந்தனர்.
மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் பிளஸ் 2 முடித்து விட்டு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். 2-வது மகன் லிங்கேஷ் குமார் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
டாக்டர் பாலமுருகன் அண்ணாநகர் 13-வது மெயின் ரோட்டில் ஸ்கேன் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். மருத்துவ தொழிலில் முதலீடு செய்வதற்காக அவர் பலரிடமும் கடன் வாங்கி இருந்தார்.
அவருக்கு ரூ.5 கோடி வரை கடன் இருந்ததாக தெரிகிறது.
கடன் கொடுத்தவர்கள் கடந்த சில மாதங்களாக டாக்டர் பாலமுருகனிடம் கடனை திருப்பிக் கேட்டு வலியுறுத்தி வந்தனர். ஆனால் டாக்டர் பாலமுருகனால் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த இயலவில்லை. வட்டி தொகையையும் அவர் கட்ட இயலாமல் திணறியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த குடும்பப் பிரச்சனையால் டாக்டர் பாலமுருகனும், அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.
இந்த நிலையில் கடன் தொகையை பலரும் டாக்டர் பாலமுருகனிடம் திருப்பி கேட்டனர். இதனால் மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளான டாக்டர் பாலமுருகன் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தார்.
இதுபற்றி அவர் தனது மனைவி சுமதியிடம் கூறியதாக தெரிகிறது. அவரும் உயிரை மாய்ப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. மகன்களுடன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தம்பதிகள் திட்டமிட்டனர்.
அதன்படி டாக்டர் பாலமுருகன் தனது மனைவி சுமதி மற்றும் 2 மகன்களுடன் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டனர்.
வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு 4 பேரும் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். டாக்டர் பாலமுருகன் ஒரு மின் விசிறியிலும், அவரது மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் மற்றொரு மின்விசிறியிலும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து இருந்தனர்.
வழக்கறிஞர் சுமதி தனது 2-வது மகன் லிங்கேஷ் குமாருடன் ஒரே மின் விசிறியில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது அருகில் உள்ள வீடுகளில் யாருக்கும் கேட்கவில்லை.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு டாக்டர் பாலமுருகனின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் வந்து கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரமாக காலிங் பெல் அடித்தும், கதவை தட்டியும் யாரும் திறக்காததால் பணிப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர் பக்கத்து வீடுகளில் இதுபற்றி தகவல் தெரி வித்தார். அவர்கள் வந்து அழைத்தும் டாக்டர் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை. இதனால் அவர்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலம் போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் டாக்டர் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இது பற்றி தகவல் பரவியதும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமங்கலம் போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.