மெயினருவியில் குளிக்க அனுமதி: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
- ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மெயின் அருவியில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் இரவு வரை சுற்றுலா பயணிகளுக்கு மெயின் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் குற்றாலம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
மெயின் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதால் குற்றாலம் வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் குற்றாலநாதர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் குளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதில் ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரானது என அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் நீண்ட வரிசையில் நின்று ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பிறப்பையொட்டி குற்றாலநாதர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், தேவாலயங்கள் என பல்வேறு வழிபாட்டுத் தலங்களிலும் காலை முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.