அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கடப்பாரையால் அறைக் கதவுகள் உடைப்பு
- நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.20 மணிக்கு நிறைவடைந்தது.
- கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். அவரது மகன் கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி கதவுகள் மூடப்பட்டன. 2 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான காட்பாடி க்கு அடுத்த பள்ளி குப்பம் வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் இவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை செய்தனர். இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.20 மணிக்கு நிறைவடைந்தது.
ஏதும் முக்கிய ஆவணங்களோ பணமோ சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. துரைமுருகன் வீட்டில் இரண்டு அறைக் கதவை உடைத்து சோதனை நடைபெற்றுள்ளது.
சாவி இல்லாததால் உடைப்பு கடப்பாரை, உளியால் உடைத்து அதிகாரிகள் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நேற்று அமைச்சர் துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 2 பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் தாழ்வார பகுதியில் 7 மணி நேரம் வரை காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.