தமிழ்நாடு

கடந்த 1½ ஆண்டில் அரசு மருத்துவ கல்லூரிக்கு 65 உடல்கள் தானம்

Published On 2025-01-06 08:27 IST   |   Update On 2025-01-06 08:27:00 IST
  • மருத்துவ மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக, இறந்தவர்களின் உடல்கள் தானமாக பெறப்படுகிறது.
  • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு ஆண்டில் 41 சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

மதுரை:

தென் மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு தனி பிரிவு, மகப்பேறு சிகிச்சைக்கு தனி பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அனைத்து வகையான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால், மதுரை மட்டுமின்றி மதுரையை சுற்றி உள்ள பக்கத்து மாவட்ட மக்களும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

கடந்த ஆண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவர்களின் விவரம், உடல்கள் தானம் பெற்றது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

"பொதுவாக சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடையும் நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 13 நபர்களிடம் இருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், எலும்பு, தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இந்த உடல் உறுப்புகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மட்டுமின்றி சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

இதுபோல், மருத்துவ மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக, இறந்தவர்களின் உடல்கள் தானமாக பெறப்படுகிறது. அதன்படி, கடந்த 1½ ஆண்டில் மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு 65 உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதற்கான முயற்சிகளை மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இருப்பிட மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்டு, உடல் தானம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன் விளைவாக உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் தாங்களாக முன்வந்து உடலை தானமாக வழங்குவது என கிட்டத்தட்ட 65 உடல்கள் தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன. தானமாக பெறப்பட்ட உடல்களில், மதுரை மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுக்கு 20 உடல்கள் போதுமானது. மீதமுள்ள உடல்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட அரசு மருத்துவகல்லூரிகளுக்கும், அரசு விதிமுறைகளை பின்பற்றி தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. உடல்களை தானமாக வழங்கும் நபர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் உறவினர்களுக்கு பாராட்டு சான்றிதழும், போலீஸ் நிலையங்கள் மூலம் ஒப்படைக்கப்படும் உடல்களுக்கு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதுபோல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு ஆண்டில் 41 சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அதிநவீன சிறப்பு சிகிச்சைகளின் மூலம், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News