தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

Published On 2025-01-06 06:50 IST   |   Update On 2025-01-06 06:50:00 IST
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற இருக்கிறார்.
  • சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் வாசிப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதே நடைமுறை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜனவரி 6) துவங்குகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற இருக்கிறார்.

இதற்காக அவர் இன்று காலை 9.20 மணிக்கு தலைமை செயலகம் வருகிறார். அவரை வரவேற்க பேண்டு வாத்தியங்கள் மற்றும் காவல் துறை அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இதன்பிறகு, ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று தெரிகிறது. இவரைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் வாசிப்பார். இத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடையும்.

ஆளுநர் உரையைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அறையில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பாக கொண்டு விவாதிக்க கடிதம் கொடுத்துள்ளன. துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதத்துடன் இந்தக் கூட்டத்தொடர் சுமார் ஒன்றரை மாதங்கள் வரை நடைபெறும்.

Tags:    

Similar News