மழை எச்சரிக்கையால் சதுரகிரியில் பக்தர்களின் வருகை குறைவு
- செவ்வாய் பிரதோஷமான இன்று காலை 6.40 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப்பட்டது.
- பிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இன்று மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டும், 13-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டும் இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி செவ்வாய் பிரதோஷமான இன்று காலை 6.40 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப்பட்டது. காத்திருந்த பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். வத்திராயிருப்பு மற்றும் மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது.
மேலும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக சதுரகிரிக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
பிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.