வைத்திலிங்கத்துடனான சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது- சசிகலா
- அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
- அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தனது சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
வைத்திலிங்கத்தை நேற்று இரவு திடீரென, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஒவ்வொருவரும் தலா அரைமணி நேரம் சந்தித்து பேசினர். சசிலாவுடன், அவருடைய சகோதரர் திவாகரன் உடன் வந்தார்.
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினர் அனைவரும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என சசிகலா கூறி வந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இணைப்புக்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வைத்திலிங்கத்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-
வைத்திலிங்கத்துடனான இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். ஆரம்பித்தது. மக்களுக்காக ஆரம்பித்தது. தி.மு.க. போல் இல்லை. நல்ல ஆட்சி 2026-ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். வெளியில் சில பேர் நினைக்கலாம், அ.தி.மு.க.வை சுக்கு நூறாக உடைத்துவிடலாம் என்று. அது எப்படி என்றால் கடலில் இருக்கும் தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல தான்.
அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. 2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்லபடியா ஆட்சி அமைத்து, அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும். அனைவரும் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருவது குறித்து கேட்டதற்கு, இது ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. எங்கள் கட்சியின் சட்டதிட்ட விதிகள் படி அடிமட்ட தொண்டர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ? அதுதான் இந்த கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாக செய்வோம்.
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசிய கருத்து குறித்து கேட்டதற்கு, தி.மு.க. மத்திய அரசு என்று முதலில் பார்க்க வேண்டும். மத்திய அரசு என்று பார்த்தால் தான் இங்கு ஆட்சி சரிவர நடத்த முடியும். நீங்கள் சண்டை போடுவதற்காக மக்களின் வாக்குகளை வாங்கி போய் பாராளுமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால், வரும் 2026-ல் அதற்கு உண்டான பதிலை தமிழக மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள். இங்கு அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை மாற்று பாதையில் கொண்டு போகும் ஒரே எண்ணத்தில் அவர்கள் செய்யும் தவறை வெளியே போகாமல் மாற்றும் முயற்சியில் இந்த மாதிரி வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் ஒரு சில விஷயம் தான் வெளியே வந்து உள்ளது. இன்னும் போகப்போக 2026-தேர்தலுக்கு முன் நிறைய விஷயங்கள் வெளியே வரும். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தை சீர்கெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எல்லாத்துக்கும் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.