தமிழ்நாடு

பள்ளி மாணவன் மீது சாதிய கொலைவெறி தாக்குதல்- திருமாவளவன் கண்டனம்

Published On 2025-03-10 21:23 IST   |   Update On 2025-03-10 21:23:00 IST
  • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜூக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்.
  • தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

திருவைகுண்டம் அருகே 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அரியநாயகபுரம் கிராமத்தைச் சார்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் மீது சாதிவெறியர்கள் நடத்தியுள்ள சாதிய கொலைவெறித் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்னர் கட்டாரிமங்கலத்தில் அரியநாயகபுரம் அணிக்கும் கெட்டியம்மாள்புரம் அணிக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் அரியநாயகபுரம் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அரியநாயகபுரம் அணியில் இடம் பெற்றிருந்த தேவேந்திர ராஜ் உள்ளிட்ட அனைவரும் கோப்பையுடன் கொண்டாடியுள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள இயலாத காழ்ப்புணர்ச்சியால் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என தேவேந்திர ராஜின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

கெட்டியம்மாள்புரத்தைச் சார்ந்த மூன்று பேர் இன்று பள்ளிக்கு தேர்வு எழுத பேருந்தில் சென்ற மாணவன் தேவேந்திர ராஜை பேருந்திலிருந்து கீழே இறக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் மாணவன் தேவேந்திர ராஜின் இருகைகளிலும் விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. நான்கு விரல்கள் துண்டாகியுள்ளன. அவற்றில் ஒரு விரல் கிடைக்கவில்லை. மற்ற மூன்று விரல்களையும் ஒட்டும் அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்று வருகிறது. தலையில் ஆறு இடங்களில் வெட்டியுள்ளனர். மண்டைஓடு வரை படுகாயம் பட்டுள்ளது. முதுகிலும் பல இடங்களில் வெட்டுக் காயம் உள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜூக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்.

தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

சாதிய வன்கொடுமைகளை தடுத்திடும் வகையில் தமிழக அரசு இதற்கென காவல்துறையில் தனியே ஒரு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்கிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

என திருமாவளவன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News