தமிழ்நாடு

மாஃபா பாண்டியராஜனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி

Published On 2025-03-10 15:30 IST   |   Update On 2025-03-10 15:30:00 IST
  • மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்தார்.
  • மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

விருதுநகரில் கடந்த 5-ந்தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கினர். பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.

இதே போல் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமாரும் பொன்னாடை அணிவிக்க வந்துள்ளார். வரிசையில் வராமல் முந்திக்கொண்டு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை ராஜேந்திரபாலாஜி கண்டித்ததாகவும், பின்னர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அவரிடம் எதற்காக இப்படி முந்தி கொண்டு வருகிறாய்? என சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான். வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன். நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா. பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று (10.03.2025) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News