வாய்க்கு வந்ததை பேசுகின்றனர்.. தர்மேந்திர பிரதானுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
- வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.
- இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இன்று நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுபினர்களை அநாகரீகமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தான் இவ்வகையில் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மாண்பை பற்றி சிறிதும் தெரியாதவர்கள் பாஜகவினர், சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினரை அவர் சார்ந்த மதம் குறித்து பாஜக உறுப்பினர் அவதூறாக பேசும்போது, பாஜகவின் மூத்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அதை ரசித்து, சிரித்து கொண்டிருந்தார்கள், இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.
பாஜகவினர் கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், உரிய நேரத்தில் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.