தமிழ்நாடு

ஆக்சிஜன் ஏற்றி வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து- கியாஸ் கசிந்ததால் பரபரப்பு

Published On 2025-03-10 12:27 IST   |   Update On 2025-03-10 12:37:00 IST
  • விபத்தில் இரண்டு லாரியின் ஓட்டுனர்களுக்கு காயம் எதுவும் இல்லை.
  • விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை-தூத்துக்குடி நான்கு வழி புறவழிச்சாலையில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் இன்று அதிகாலை லாரி ஒன்று தஞ்சாவூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திற்கு மருத்துவ கியாஸ் (ஆக்சிஜன்) ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

சாலையோரத்தில் அந்த லாரி நின்று கொண்டிருந்த போது கொல்கத்தாவில் இருந்து தூத்துக்குடிக்கு பனை ஓலை கைவினை பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்காக வந்த மற்றொரு லாரி எதிர்பாராத விதமாக கியாஸ் ஏற்றி வந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு லாரியின் ஓட்டுனர்களுக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால் லாரியில் இருந்த கியாஸ் டேங்கரில் இருந்து வாயு கசிந்தது. இதுகுறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு காவல்துறையினர் விரைந்து வந்து கியாஸ் கசிவை தடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News