PM SHRI திட்டத்தை ஏற்பதாக ஒருபோதும் தமிழ்நாடு அரசு கூறவில்லை - அமைச்சர் அன்பில் மகேஸ்
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானின் கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- தேசிய கல்வி கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல. இது RSS-இன் நிகழ்ச்சி நிரல்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ் மக்களை தர்மேந்திர பிரதான் அவமதித்துள்ளார். அவர்கள் மனதில் இருப்பது வெளியே வந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு தர்மேந்திர பிரதானின் பேச்சே சான்று. நமது எம்.பி.க்களை அவமதிப்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல்.
பி.எம். ஸ்ரீ திட்டம் தொடர்பாக குழு அமைத்த பிறகே முடிவு என கடிதத்தில் தெளிவாக கூறினோம் கல்வி விவகாரத்தில் அரசியல் செய்வது யார் என மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தர்மேந்திர பிரதானின் ஒடியா மொழியின் நிலை என்ன என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு எந்த U TURN-ம் அடிக்கவில்லை. பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக ஒருபோதும் கூறவில்லை. எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர்தான்" நாட்டின் No.1 முதல்வரான மு.க.ஸ்டாலின்தான் சூப்பர் முதல்வர்" என்று தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்களின் மூர்க்கத்தனமான கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கு உண்மையிலேயே புரிகிறதா அல்லது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ஸ்கிரிப்டை மீண்டும் படிக்கிறாரா? கல்வியில் மத்திய பாஜக அரசின் அரசியல் தலையீட்டை மன்னிக்கமாட்டோம். மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த துரோகத்தை நினைவில் வைத்திருப்பார்கள்.
தேசிய கல்வி கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல. இது RSS-இன் நிகழ்ச்சி நிரல். தமிழ்நாடு அதை முற்றிலுமாக நிராகரிக்கிறது.
நமது மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நமது திமுக எம்.பி.க்கள் கல்விக்காகவும் நமது மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் போராடுகிறார்கள். நீதி வெல்லும் வரை இந்தப் போராட்டம் நிற்காது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.