தமிழ்நாடு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக சென்னையில் திமுகவினர் போராட்டம்

Published On 2025-03-10 15:41 IST   |   Update On 2025-03-10 15:41:00 IST
  • தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தர்மேந்திரா பிரதான தெரிவித்தார்
  • தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது என்று தர்மேந்திரா பிரதான தெரிவித்தார்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்.

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், மும்மொழி கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு எதிராக சென்னையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News